Dignity Kitchen Fire: பூன் கெங் பகுதியில் உள்ள ‘Dignity Kitchen’ உணவக வளாகத்தின் அருகேயுள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அது தற்போது மூடப்பட்டுள்ளது.
சமூக சேவை நிறுவனமான ‘Project Dignity’ இதனை அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்து, ஏற்படுத்தியுள்ள சிரமத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், இச்சம்பவத்தால் தனது ஊழியர்களுக்காக அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடைபட்டுள்ளன.
தீ வேண்டுமென்றே வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சின் மின் நாளிதழ் செய்தியின்படி, பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை இந்த தீ விபத்து நடந்துள்ளது. அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், பூன் கெங் சாலையிலுள்ள ‘Dignity Kitchen’ வளாகத்தின் ஓரத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பையும், வானளவு புகை போவத்தையும் காட்டுகின்றன.
தீயணைப்புப் படையின் உதவியுடன் விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சேதமடைந்த குளிர்சாதன வசதிகள் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் போன்றவை தெளிவாகின்றன.
விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு ‘Dignity Kitchen’ நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
உணவக வளாகத்திற்கு வெளியே கிடந்த குப்பைகளில் தொடங்கிய தீ என்பதால், யாராவது வேண்டுமென்றே வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை சின் மின் நாளிதழுக்கு உறுதி அளித்துள்ளது.
படம்: Mothership SG