Immigration Violation Increase in Singapore: கடந்த 2023-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குடிவரவுச் சட்டங்களை மீறியதற்காக பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 42% உயர்ந்துள்ளது.
2023-ல் 587 நபர்களையும், 2022-ல் 414 நபர்களையும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) கண்டறிந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் இவ்வாறு குற்றவாளிகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை ICA தீவிரமாக்கியுள்ளது.
இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், 2018-ல் (1,000 பேருக்கும் மேல்) மற்றும் 2019-ல் (932 பேர்) என கொரோனாக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்றைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு உதவுவதிலும் அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்துவதிலும் ஈடுபட்டு சிக்கியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இத்தகைய உதவிகளைச் செய்தவர்களில் 45% அதிகரிப்பை 2023 கண்டது.
அவர்களில் சிலர் உறவினர்கள், நண்பர்கள் அல்லது முதலாளிகள் ஆவர். தாங்கள் அமர்த்துபவர்கள் அல்லது உதவுபவர்களின் குடிவரவு அனுமதிகளை அவர்கள் சரியாக சரிபார்க்காமல் போனதே இதற்குக் காரணம்.
குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள் பலர், வாடகைதாரர்கள் சிங்கப்பூரில் குறிப்பிட்ட வாடகைக் காலம் வரை தங்கும் உரிமையைப் பெற்றுள்ளார்களா என்பதைச் சரிபார்க்காமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்.
சரியான குடிவரவு அனுமதிகளைப் பெறாமல் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளின் எண்ணிக்கையும் 2023-ஆம் ஆண்டு கடந்த ஆண்டை விட இருமடங்காக உயர்ந்துள்ளது.
இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பொதுவாக தூய்மை சேவைகள், சமையலறை உதவி அல்லது உணவு மற்றும் பானத் துறைகளில் காணப்பட்டனர்.
குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு வேலை கொடுப்போர் அல்லது தங்குமிடம் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என ICA எச்சரித்துள்ளது.
சட்டவிரோதமாக தங்குவதைத் தடுக்க உரிய சரிபார்ப்புகளை மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் முதலாளிகள் ஒத்துழைப்பு நல்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.