உலகம் முழுவதிலுமிருந்து கைதேர்ந்தவர்களையும் தொழில்முனைவோரையும் சிங்கப்பூர் ஈர்த்து வருகிறது. நீங்கள் வேலை தேடி சிங்கப்பூருக்கு குடிபெயர யோசித்துக் கொண்டிருந்தால், Employment Pass அல்லது EP பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நிர்வாகம், மேலாண்மை அல்லது சிறப்பு தேவைப்படும் வேலைகளை மேற்கொள்ளும் அயல்நாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி இது ஆகும்.
சிங்கப்பூரில் சீராக பணியாற்ற வேலைவாய்ப்பு அனுமதி குறித்த நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். எளிமையான முறையில் EP பற்றி இப்போது பார்ப்போம்.
Employment Pass என்றால் என்ன?
மேலாண்மை (Managerial), நிர்வாகம், மற்றும் தனித்துவ திறன் தேவைப்படும் துறைகளில் வேலை செய்ய சிங்கப்பூரில் பணியமர்த்தும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் இறுக்கமாகவும், குறிப்பிட்ட வேலைவகைகளுக்கு மட்டும் பொருந்தும் பிற வேலை அனுமதிகளைப் போலல்லாமல், மேம்பட்ட திறன்கள் மற்றும் தகுதிகளைக் கொண்ட தொழில் வல்லுநர்களுக்கானது இது.
Employment Pass யார் விண்ணப்பிக்கலாம்?
வேலைவாய்ப்பு அனுமதி பெற சில அடிப்படைத் தகுதிகள் அவசியம்:
- வேலை வாய்ப்பு: சிங்கப்பூரில் நிர்வாக அல்லது மேலாண்மை அல்லது தனித்திறமை சார்ந்த பணிவாய்ப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச ஊதியம்: மிக முக்கியமாக, மாதம் குறைந்தது SGD 4,500 ஊதியம் ஈட்ட வேண்டும். அனுபவம் மிக்கவர்கள், நிதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த சம்பள அளவுகோல் இன்னும் அதிகமாக இருக்கும்.
- தகுதிகள்: பொதுவாக, பல்கலைக்கழகப் பட்டம், தொழில்முறை தகுதிகள் அல்லது சிறப்பு திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். படிப்பை மட்டும் வைத்து முடிவெடுக்கப்படுவதில்லை. தொழில் அனுபவத்திற்கும், நீங்கள் வகிக்கும் பதவிக்கும் ஏற்ப இது அமைகிறது.
Employment Pass எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கான விண்ணப்ப நடைமுறை எளிமையானதுதான். ஆனாலும், விவரங்களைச் சரியாக அளிப்பது முக்கியம்.
- பணிபுரியும் சிங்கப்பூர் நிறுவனமே மனிதவள அமைச்சகத்தின் (MOM) இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
- கடவுச்சீட்டு விவரங்கள், நிறுவனத்தின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். தேவைப்படும் போது கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படலாம்.
- இணையம் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மூன்று வார காலத்தில் பரிசீலிக்கப்படும். ஆனால் இன்னும் தகவல்கள் வேண்டுமென்றால் காலதாமதமாகலாம்.
Employment Pass இனால் கிடைக்கும் நன்மைகள்
Employment Pass கொண்டிருப்பதால் கிடைக்கும் சில நன்மைகள்:
- தொடக்கத்தில் அனுமதி இரண்டு வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும். மூன்று வருடங்கள் வரை இதனைப் புதுப்பிக்கலாம்.
- நெருங்கிய குடும்பத்தினரை ‘டிபெண்டண்ட் பாஸ்’ அல்லது ‘நீண்ட கால பாஸ்’ கேட்டு விண்ணப்பித்து சிங்கப்பூருக்கு அழைத்துவர முடியும்.
- ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொடர்புடையது என்றாலும், வேறு வேலை மாறினால் புதிய EP பணிபுரியும் நிறுவனம் மூலம் பெற இயலும். குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் கீழ் சொந்தமாக வணிகம் தொடங்கவும் வாய்ப்புண்டு.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
Employment Pass பல பல வழிகளில் வாய்ப்புகளைத் தந்தாலும், சில நடைமுறைகளையும் நினைவில் கொள்ளவும்:
- EPக்கு Quota நடைமுறை இல்லை. இதனால் எத்தனை EP வழங்கலாம் என்றெல்லாம் வரையறை இல்லை. இருந்தாலும் வேலைவாய்ப்பை பன்முக தன்மையுடன் அளிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
- வேலைவாய்ப்பு அனுமதி அடிக்கடி புதுப்பிக்கப்பட்டாலும், ஆய்வுக்கு உட்பட்டதே. ஊதியம், பணி, உள்ளூர் பொருளாதாரத்துக்கு கம்பெனி அளிக்கும் பங்களிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
- வேலைவாய்ப்பு அனுமதி சம்பளத் தகுதி என்பது அவ்வப்போது மறுபரிசீலனைக்கு உட்பட்டது. மாற்றங்களைத் தொடர்ந்து தெரிந்து வைத்துக் கொள்ளுதல் முக்கியம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
EP வைத்திருந்தால் நிரந்தர வதிவிட உரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியுமா?
முடியும். சிங்கப்பூரில் எவ்வளவு காலம் குடியிருந்தீர்கள், வேலையில் உங்கள் பங்களிப்பு, சிங்கப்பூர் கலாச்சாரத்துடன் எவ்வளவு ஒன்றி போயுள்ளீர்கள் போன்ற பல காரணிகள் கணக்கில் கொண்டு நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பம் செய்ய EP தகுதி அளிக்கிறது.
-
Employment Pass கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்?
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மேலதிக தகவல்களுடன் உங்கள் நிறுவனம் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். இதற்கும் சுமார் மூன்று வாரங்கள் ஆகும்.
-
Employment Passக்கு விண்ணப்பிக்க வேலை கையில் இருக்க வேண்டுமா?
ஆம், சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து பணி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். பணிக்கும் நிறுவனத்துக்குமான EP உங்களைச் சார்த்தது; நிறுவன ஒப்புதல் இல்லாமல் சுயமாக விண்ணப்பிக்க முடியாது.