பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை, ஜூரோங் ஈஸ்டில் உள்ள வீடமைப்பு வாரிய குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
கவனக்குறைவாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி தான் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டில் இருந்த இருவர் சொந்தமாக வெளியேறிவிட்டனர். இருப்பினும், மூன்றாவது நபர் புகையை அதிகம் சுவாசித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த குடியிருப்பில் வசித்த முதிய பெண்மணி வீட்டின் பால்கனியில் இறை வழிபாட்டிற்காக மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கவனக்குறைவாக விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அருகில் இருந்த அட்டைப் பெட்டிகள் தீப்பிடிக்க, தீ அடுத்தகட்டத்திற்குச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வீடு மட்டுமல்லாது, அவ்வீட்டிலிருந்து படிக்கட்டுகள் வரையிலான நடைபாதையும் ஆறு வருடங்களாகச் சேர்த்து வைக்கப்பட்ட பழைய பொருட்களால் நிறைந்திருந்தது.
அருகில் வசிப்பவர்களின்படி, தீவிபத்து போன்ற அவசரகாலங்களில் படிக்கட்டு வழியே வெளியேற வேண்டியிருந்தால் இவை இடையூறாக இருக்கும் என்ற கவலை இருந்தது.
எனினும், அந்த முதிய பெண்மணி இப்பொருட்களை விற்று கிடைக்கும் வருமானத்தை நம்பியிருந்ததால் யாரும் அதிகம் குறுக்கிடவில்லை.
நகர மன்றம் கூட ஒருமுறை அங்கு தேங்கியிருந்த பொருட்களை அப்புறப்படுத்தியது, ஆனால் பின்னர் அவை மீண்டும் குவிந்து விட்டன.
தீ விபத்து நடந்தபோது, மற்ற தளங்களில் வசிப்பவர்கள் விரைந்து செயல்பட்டு படிக்கட்டுப் பாதையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் அதிகாலை 1:50 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
சமைக்கும்போது கவனக்குறைவு, மின்சாரக் கோளாறு, மற்றும் மெழுகுவர்த்தி போன்றவை, வீடுகளில் தீ விபத்து ஏற்பட வழக்கமான காரணிகள் என்று அவர்கள் எச்சரித்தனர்.