2023ஆம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூரில் 46,000க்கும் மேற்பட்ட இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவே அதிக எண்ணிக்கை.
இருப்பினும், ஏமாந்து இழந்த பணத்தின் மொத்த அளவு 1.3% குறைந்து, அது சுமார் S$65 கோடியாக உள்ளது.
மோசடிச் சம்பவங்கள் அதிகரித்தபோதிலும், அதிகாரிகளும் வங்கிகள் உள்ளிட்ட தனியார் துறையும் மேற்கொண்ட முயற்சிகள் இந்த இழப்புகளைக் குறைக்க உதவியுள்ளன.
ஆயினும், மோசடிகளால் இழக்கப்படும் பணம் கணிசமானது என்று காவல்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு மோசடிகளே இதில் அதிகம். இ-காமர்ஸ் மற்றும் போலி இணையதள மோசடிகள் (பிஷிங்) கூட மக்களுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, ஆண்ட்ராய்டு சாதனங்களை குறிவைக்கும் மால்வேர் தாக்குதல் மோசடிகள் மூலம் குறைந்தபட்சம் S$34.1 மில்லியன் பணம் திருடப்பட்டுள்ளதை காவல்துறை கவனித்துள்ளது.
மக்களைப் பாதுகாக்க வங்கிகளும் அரசாங்கமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருகின்றன.
30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களே இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை மோசடியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் மோசடிகள் மிக அதிகமாகி வருவது குறித்து காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.
இணைய மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா இணையதளங்களின் ஒத்துழைப்பையும் பெறுவதில் சிங்கப்பூர் காவல்துறை சவால்களை எதிர்கொள்கிறது.
சில இணையதளங்கள் ஒத்துழைப்பு தருகின்றன, ஆனால் மெட்டா போன்ற நிறுவனங்கள் பெரிய ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கூறப்படுகிறது.