வலைதள சேவையான PocketCare மூலம், நோயாளிகளுடன் நேரிலோ அல்லது வீடியோ அழைப்பிலோ கலந்துரையாடாமலேயே நோய் சான்றிதழ் வழங்குவதாக மெட்ஸ்டார் மருத்துவமனை மீது சுகாதார அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களிலும் தங்கள் வலைதளத்திலும் இந்த மருத்துவமனை விரைவாகவும் மலிவாகவும் நோய் சான்றிதழ் வழங்குவதாக விளம்பரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வீடியோ அழைப்பு எதுவும் தேவையில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
எனினும், நோயாளியினை நேரிலோ, வீடியோ வழியாகவோ பார்க்காமல், வெறும் படிவம் மூலம் நோய் சான்றிதழ் வழங்கும் முறையினை மெட்ஸ்டார் கையாண்டது தெரியவந்துள்ளது.
இது பொய் கூறி சான்றிதழ் வாங்குவதற்கு வழிவகுக்கும் என்பதோடு, உண்மையிலேயே மருத்துவ ஆலோசனை தேவைப்படுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சகம் கருதுகிறது.
தொடக்க மருத்துவ ஆலோசனைக்கு வீடியோ அழைப்பு கட்டாயம் எனும் விதிமுறைகளுக்கு கட்டுப்படாததால் மருத்துவமனை சிக்கலைச் சந்திக்க நேரிடும்.
மருத்துவமனையின் இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதோடு, தொழில்முறை தரங்களை மீறியதாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
விதிமுறைகளை மருத்துவமனைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதில் சுகாதார அமைச்சகம் உறுதியாக உள்ளது.