சிங்கப்பூர் பட்ஜெட் 2024இல் SkillsFuture மூலம் 4,000 வெள்ளி திறன் மேம்பாட்டு நிதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கழிப்பறை சுத்தம் செய்வதற்கான பயிற்சி வகுப்பு (Toilet Cleaning Course) இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
40 க்கும் மேற்பட்ட இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் 75 முதல் 440 வெள்ளி வரையிலான கட்டணத்துடன் SkillsFuture திட்டத்தில் இடம்பெற்றுள்ளதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வளவு வெள்ளி கொடுத்து அடிப்படை கழிப்பறை சுத்தம் செய்யும் முறைகளை கற்றுக் கொள்வது அவசியமா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்த பயிற்சி வகுப்புகள் சாதாரண மக்களுக்காக அன்றி தூய்மைப் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள SkillsFuture Singapore (SSG) மற்றும் தேசிய சுற்றுப்புற வள நிறுவனம் (NEA), இதுபோன்ற பயிற்சிகள் மூலம் தூய்மைப் பணித்துறையில் திறனையும், தொழில்நேர்த்தியையும் உயர்த்துவதை தங்களின் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
உரிமம் பெற்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை முடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஏற்கனவே 500க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர்.
இது இத்தகைய படிப்புகளுக்கான தேவையையும், பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், உதவித்தொகைகளையும் வெளிப்படுத்துகிறது.
இதேபோன்று, தொட்டியில் செடி வளர்ப்பு, க்ரேயான் ஓவியம் என ஏளனம் செய்யப்படும் பிற SkillsFuture படிப்புகளும் உள்ளன.
ஆனால், SkillsFuture இணையதளத்தை ஆராய்ந்து பார்த்தால், பூக்கள் தொகுத்தல் முதல் செல்லப்பிராணி பராமரிப்பு வரை பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
மேலும், சிங்கப்பூரின் துணை பிரதமர் லாரன்ஸ் வொங், நடுத்தர வயதினர் தங்களின் திறனை தொடர்ந்து மேம்படுத்தி கொள்வதற்கான ஆதரவாகவே 4,000 வெள்ளி SkillsFuture நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.