சிங்கப்பூரின் நிதியமைச்சர் திரு. லாரன்ஸ் வோங் தெரிவித்த ஒரு முக்கிய அறிவிப்பின் படி, குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் Workfare திட்டத்தின் கீழ் விரைவில் பண உதவி கிடைக்கும்.
இந்த மாற்றத்தால், சம்பளம் குறைவாக வாங்குபவர்கள் கையில் சற்று அதிக பணம் வரும்.
இந்தத் திட்டத்தின் உச்சகட்ட உதவித்தொகை $4,900 வரை உயரும். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் கூடுதல் உதவி செய்யும்.
குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் Workfare வருமான உதவித் திட்டத்தில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்படுகின்றன.
2025 ஜனவரி 1 முதல் இவை அமலுக்கு வரும். இதன் மூலம் சிங்கப்பூரில் சுமார் 500,000 பேர் வரை பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்திற்கு தகுதி பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, வருமான உச்சவரம்பும் $3,000 ஆக உயர்த்தப்படுகிறது.
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் மேற்கொள்ளப்படும் பரந்த முயற்சிகளில் இந்த மேம்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், இத்தகைய அணுகுமுறை சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு, குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமநிலையான சமுதாயத்தைக் கட்டமைக்கும்.