மலேசியாவின் ஜோகூர் நெடுஞ்சாலையில் சிங்கப்பூர் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெரிசலான போக்குவரத்தை சமாளிக்கும் விதமாக அவசர வழித்தடத்திற்குள் நுழைந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து சம்பந்தப்பட்ட வீடியோ பிப்ரவரி 12, 2024 அன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, எந்தவித சமிஞ்சையுமின்றி சிங்கப்பூர் கார் திடீரென அவசர வழித்தடத்திற்குள் நுழைந்துள்ளது.
இதனால் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த மோதலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் விபத்தில் பலத்த காயமடைந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பலரும் கோபத்தை வெளிப்படுத்தினர். சமிஞ்சை குறிப்புகளைப் பயன்படுத்தாமல், அவசர வழித்தடத்தை கார் ஓட்டுநர் தவறாகப் பயன்படுத்தியதை பலரும் விமர்சித்துள்ளனர்.
விபத்தை அடுத்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் கூட அவசர வழித்தடத்தில் வந்துகொண்டிருந்ததாகவும், போதிய வேகக் கட்டுப்பாட்டை அவர் கடைபிடிக்கவில்லை என்றும் பலர் அவரை விமர்சித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மலேசிய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரலான காணொளியை அடுத்து, சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பதிவெண் கொண்ட கார் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதன் மூலம் போலீசார் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருவது உறுதியாகிறது.