நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்றின்போது, துரதிர்ஷ்டவசமாக வீரர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், Football Boots Indonesia Subang அணியைச் சேர்ந்த 35 வயது செப்டியன் ரஹார்ஜா மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
மின்னல் தாக்குதலின் மூலம் ஏற்பட்ட பலத்த தீக்காயங்களுடன் ரஹார்ஜா விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலில் வானம் தெளிவாக இருந்த நிலையில், போட்டியின் இரண்டாம் பாதியில் திடீரென்று வானிலை மாற்றமடைந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டியன் ரஹார்ஜா விளையாடிய எதிரணியான 2flo Football Club உள்ளிட்ட கால்பந்து கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
விளையாட்டு கிளப்புகள் மற்றும் கால்பந்து அமைப்புகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன.
ரஹார்ஜாவின் நினைவைப் போற்றும் வகையில் பிப்ரவரி 11 அன்று நடைபெற்ற கால்பந்து போட்டிக்கு முன் ஒரு நிமிட மௌன அனுஷ்டிப்பு கடைபிடிக்கப்பட்டது.