ஜலான் புக்கிட் மெராவில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதி எண் 3 இல், வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மதியம் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில், 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணத்தில் சதி ஏதும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் குடியிருப்பை சுற்றிவளைத்து தடயங்களை சேகரித்தனர். உடலில் புழுக்கள் வளர்ந்த நிலையில் மாலை 6 மணியளவில் அந்த பெண்ணின் சடலம் அப்புறப்படுத்தப்பட்டது.
துர்நாற்றம் முந்தைய நாளே தொடங்கிவிட்டதாகவும், அது தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
அதே குடியிருப்புக்கு எதிர்வீட்டில் வசிக்கும் 18 வயது மாணவர் ஒருவர், இறந்த பெண் வேறு தளத்தில் வசித்து வந்ததாகவும், சிறையில் இருக்கும் தனது நண்பரின் வீட்டைக் கவனித்துக் கொள்வதற்காக அவ்வப்போது இங்கு வருவார் என்றும் கூறினார்.
அவரை சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குடியிருப்புத் தொகுதியில் வயதானவர்கள் பலர் தனியாக வசித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
அதே குடியிருப்பைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர், இறந்த பெண்ணை தனக்குத் தெரியாது என்றாலும், தனியாக வசிக்கும் மற்ற முதியவர்களை நினைத்து வருத்தம் தெரிவித்தார்.
தற்போது சிங்கப்பூரில், தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்பதால் இது கவலை தரும் விஷயமாக உள்ளது.