சிங்கப்பூர் விமான நிறுவனத்தில் முன்பு பணியாளராக பணியாற்றிய துரைராஜ் சந்திரன், கடந்த 2019, செப்டம்பரில் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் வரும் ஒரு விமானத்தில் பணிபுரியும் போது, வழுக்கி விழுந்ததாக கூறி, 17 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழுக்கலால் தனது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு, அதன் பின்னர் தன்னால் பணிபுரிய முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
சுமார் 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு, விமானம் சிங்கப்பூரில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
துரைராஜின் வழக்கறிஞர்கள், பிப்ரவரி 2024 இல் தொடங்கிய வழக்கில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கத் தவறிவிட்டதாகவும், அந்த விமானத்தில் இருந்த வழுக்கும் பொருளை முறையாக சுத்தம் செய்யத் தவறிவிட்டது என்றும் வாதிட்டனர்.
துரைராஜ் மூத்த பணியாளர்களிடம் அந்த வழுக்கும் தன்மையைப் பற்றி எச்சரித்தும், அதைத்தானே சுத்தம் செய்ய முயன்றும் முடியவில்லை என்று கூறினார்.
விமானம் தரையிறங்கும் சமயத்தில், பயணிகளுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வழுக்கி விழுந்து, முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்ததாகவும், பின்னர் வீல் சேரில் வைத்து அழைத்து வரப்பட்டதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அப்படி வழுக்கும் தன்மை உள்ள பகுதி எதுவும் விமானத்தில் இருக்கவில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரப்பு மறுத்துள்ளது.
அவர்களின் வழக்கறிஞர்கள், துரைராஜ் ஏற்கனவே இதுபோன்ற காயம் தொடர்பான பிரச்சினைகளில் வழக்குத் தொடர்ந்தவர் என்று வாதிட்டு, விமானத்தில் விழுந்ததால் மட்டுமே அவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.
வேறு யாரும் விமானத்தில் அவ்வாறு ஒரு வழுக்கும் பகுதியை கவனிக்கவில்லை அல்லது வழுக்கியதாக புகார் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழக்கை எதிர்கொண்டு, விமான நிறுவனத்தின் தவறால்தான் விபத்து நிகழ்ந்தது என்பதை துரைராஜ் நிரூபிக்க தவறிவிட்டார் என்று தனது தரப்பிலும் வாதங்களை முன்வைக்கிறது.