சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விமான எரிபொருளை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளதால், இனி சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் பயணிப்பவர்களின் டிக்கெட் விலை உயரக்கூடும்.
சிங்கப்பூர் ஒரு நிலையான விமான போக்குவரத்து மையமாக மாறும் தன் முயற்சியில் ஒரு பகுதியாக இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளில் குறைந்தது 1% சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாசு குறைந்த எரிபொருளாக இருக்க வேண்டும்.
இந்த இலக்கை 2030ம் ஆண்டுக்குள் 3 முதல் 5 சதவிகிதமாக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அப்போது சற்று டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரிலிருந்து பாங்காக், டோக்கியோ, லண்டன் ஆகிய இடங்களுக்கு பயணிப்பதற்கான செலவில் (economy class) முறையே சுமார் S$3, S$6 மற்றும் S$16 அதிகரிக்கக்கூடும்.
சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம், வான்வழிப் பயணங்களில் வெளியாகும் மாசுக்களைக் குறைக்க பல்வேறு முன்முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.
2050ம் ஆண்டுக்குள் மாசுக் கட்டுப்பாட்டில் (net zero carbon emissions) முழு வெற்றி அடைவது அதன் இலக்கு என குறிப்பிடப்படுகிறது.
பழைய ஜெட் எரிபொருளுடன் ஒப்பிடுகையில், ‘பசுமை’ எரிபொருள் மாசைக் கணிசமாகக் குறைக்கும் திறன் கொண்டது.
அதனால், இந்த எரிபொருள் மாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த வகை எரிபொருள் தயாரிப்பது தற்போது விலை உயர்ந்ததாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்க வேண்டியது முக்கியம்.
அதுவே, ஒரு பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், சிங்கப்பூரின் விமானத் துறைக்கான தொடர்ந்த வளர்ச்சியை உறுதி செய்யும்.