தங்கள் பணியில் நீண்ட காலம் தொடர செவிலியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் செவிலியர்கள் 20 ஆண்டுகளுக்கு $100,000 வரை பெற முடியும்.
இந்தத் திட்டத்தால் பொது சுகாதார அமைப்புகளில் பணிபுரியும் சுமார் 29,000 செவிலியர்கள் பயனடைவார்கள்.
தங்களது வயது மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நான்கு முதல் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை செவிலியர்களுக்கு நிதி வழங்கப்படும்.
அதிலும், நீண்ட காலமாக மருத்துவ சேவையில் இருப்பவர்களுக்கும், ஓய்வுக்குப் பிறகும் பணிபுரிபவர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
சிங்கப்பூர் அரசு இந்தச் சலுகையை குறைந்தது நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரின் பொது சுகாதார அமைப்புகளில் பணியாற்றியுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த செவிலியர்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
இந்த திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக வசதிகள் அளிக்கும் அமைப்புகளும் இணைந்து கொள்ளலாம். எனினும், அவ்வாறான அமைப்புகள் அரசாங்கத்தின் நிதியுடன் தங்களின் பங்கையும் அதற்கு அளிக்க வேண்டும்.
குடும்பத் தேவைகள், வயதான பெற்றோரைப் பராமரிப்பது போன்ற சவால்கள் காரணமாக செவிலியர் பணியிலிருந்து விலகாமல் அனுபவம் வாய்ந்த செவிலியர்களை சுகாதாரத் துறையில் தக்கவைக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
செவிலியர்களுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவதன் மூலமும், தொழில்முறை வளர்ச்சிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் அவர்களது பணி உறுதித்தன்மையை அரசு மேம்படுத்த முயற்சிக்கிறது.