சாலை விதிகளை மீறி எதிர் திசையில் வந்ததாகக் கூறப்படும் சிங்கப்பூர் கார் ஒன்று, மலேசிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகி, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் கிடந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து பிப்ரவரி 21 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தாமான் பெலாங்கியில் நடந்தது.
நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், இரண்டு சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட கார்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன.
மலேசிய மோட்டார் சைக்கிள், வெள்ளை நிற சிங்கப்பூர் கார் மீது மோதியதில் அந்த இரு வாகனங்களுமே கடுமையாக சேதமடைந்தன.
அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வலது காலில் ரத்தம் வழிந்தபடி வலியால் துடிக்கும் நிலையில் கீழே விழுந்து கிடந்ததாகவும் அவர் கூறினார்.
தவறான பாதையில் வந்த மற்றொரு சிங்கப்பூர் கார் (கருப்பு நிறத்தில்) மோட்டார் சைக்கிளின் மீது மோதியதால், அது நிலைதடுமாறி வெள்ளை சிங்கப்பூர் காரின் மீது மோதியது என்று நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய கருப்பு நிற காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்த உள்ளூர் காவல்துறையினரும் ஆம்புலன்சும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு உதவி செய்தனர்.