நேற்று முன்தினம் புது தில்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடும் வானிலை சீற்றத்தால் பலத்த ஆட்டத்திற்கு உள்ளானது.
சுமார் 5:25 மணியளவில் தில்லியை விட்டுப் புறப்பட்ட 6E6125 என்ற அந்த விமானத்தின் பயணிகள், கனமழைக்கு மத்தியில் திடீர் ஆட்டங்களை எதிர்கொண்டனர்.
நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக பயணிகளால் பதிவு செய்யப்பட்ட காணொளியில், பயத்துடன் இருக்கைகளை இறுகப்பிடித்தபடி அமர்ந்திருக்கும் பயணிகளையும், ஆக்ரோஷமாக ஆடும் விமானத்தையும் காணமுடிகிறது.
வானிலை சிக்கல்களால் விமானம் 6E6125 கடும் குலுக்கலைச் சந்தித்ததை உறுதிசெய்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதே வேளையில், சவாலான சூழலிலும் பணிக்குழுவினர் அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி , விமானத்தை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கிவிட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வானிலை காரணமாகப் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
அதேவேளை, இந்த மோசமான வானிலை, ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை மற்றும் பனிப்பொழிவால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வாகன நெரிசலைத் தவிர்க்க, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மூடப்பட்டுள்ளது.
நிலைமை சீரடையும் வரை மேற்கூறிய வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், சாலைகளில் பயணிப்பது பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்படும் வரை காத்திருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.