செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் அதிரடித் திட்டம் ஒன்றை வெளியிட காத்திருக்கிறார்.
கணினி சிப் தயாரிப்பில் 7 டிரில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த சிப்கள் சாதாரணமானவை அல்ல – செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சிறப்பு சிப்கள்! அவற்றின் தட்டுப்பாடு Open AI போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதை சரிசெய்ய, ஆல்ட்மேன் பெரும் முதலீட்டாளர்களிடம் இருந்து, ஏன் அரசாங்கங்களிடம் கூட நிதி திரட்ட தீவிரம் காட்டி வருகிறார்.
சிப் தொழிற்சாலைகள், தரவு சேமிப்பு மையங்கள் என செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான கட்டமைப்புகளை உலகம் உடனடியாக பெருக்க வேண்டும் என்கிறார் ஆல்ட்மேன்.
இது பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது என்றும், அதை விரைவுபடுத்துவதில் Open AI பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
சிப் சார்ந்த தொழில்களில் கடந்தகாலத்தில் ஆல்ட்மேனின் முயற்சிகள் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளன. ஒரு சிப் நிறுவனத்தை அவரே தொடங்க முனைந்ததாகவும், இன்னொரு சிப் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இன்றைய தேதியில் செயற்கை நுண்ணறிவு சிப்களில் பெரும்பகுதி என்விடியா (Nvidia) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிரடியாக பரவி வரும் நிலையில், என்விடியாவின் ஆதிக்கம் சந்தையில் நிறையவே உள்ளது. அதை மாற்ற வேண்டும், அத்துறையில் போட்டியை உருவாக்க வேண்டும் என ஆல்ட்மேன் விரும்புகிறார்.
ஓபன்ஏஐ அதன் பிரபலமான ChatGPT சாட்பாட்டை அறிமுகம் செய்தபோது, ஆரம்பத்தில் அந்நிறுவனத்திடம் போதுமான சிப்கள் இல்லை என்பது நினைவிருக்கலாம்.
சில உள்நாட்டு சலசலப்புகளுக்குப் பிறகு, ஆல்ட்மேன் மீண்டும் ஓபன்ஏஐ-யின் தலைவராகியுள்ளார். அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் மாற்றம் செய்து பலமான குழுவை அமைத்துக் கொண்டிருக்கிறார்.