இந்தியாவில் அதிர்ச்சிகரமான மோசடி சம்பவம் ஒன்று ஜனவரி மாதத்தில் நடந்தேறியது. தந்தை ஒருவருக்கு போலீஸ் அதிகாரி போல நடித்து மோசடி கும்பல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளது.
“உங்கள் மகன் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார், அவரை விடுவிக்க பணம் தர வேண்டும்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, அப் பையனுடைய குரலையே உருவாக்கி அவரது தந்தையை நம்ப வைத்துள்ளனர்.
பதறிப்போன தந்தை மோசடி கும்பல் கேட்ட தொகையில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டார். பிறகு சிறிது நேரத்தில் தனது மகன் பத்திரமாக வேறிடத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டு அதிர்ச்சியடைந்தார்.
புது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு போலி குரல் உருவாக்கும் தொழில்நுட்பத்தை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இந்த ‘Deepfake’ போலி குரலை நம்பி பல பெற்றோர்கள் ஏமாந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்ற எண்ணி மோசடி கும்பல்களுக்கு பணம் அனுப்பிவிடுகின்றனர்.
அதேபோல், தாய் ஒருவருக்கு மகனின் ‘டீப்ஃபேக்’ குரலில் போன் அழைப்பு வந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் தனது மகன் அருகிலேயே இருப்பதை உணர்ந்த அந்த தாய் உடனடியாக இது நூதன மோசடி என்று கண்டுபிடித்துவிட்டார்.
தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை குற்றவாளிகள் எப்படி சேகரிக்கிறார்கள் என்பது பெரும் கவலையை அளிக்கிறது.
எனவே, இது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறனர்.
இதுபோன்ற மோசடிகள் இந்தியாவிற்கு மட்டும் புதிதல்ல. குரல் மற்றும் முகத் தோற்றத்தை ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தால் மாற்றி ஏமாற்றும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.
பணம் பறிக்கும் நோக்கத்துடன் அறிமுகமானவர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களைப் போலவே சமாளிக்கும் இணைய மோசடிகள் அதிர்ச்சியை அளிக்கின்றன.
எச்சரிக்கையுடன் இருப்பது ஒன்றுதான் இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் ஒரே வழி ஆகும்.