பெப்ரவரி 25 ஆம் தேதி செங்காங்கில் உள்ள பெல்வாட்டர்ஸ் (Bellewaters) குடியிருப்பில் 13வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதால் சுமார் 200 குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த அபார்ட்மெண்டின் பால்கனியில் இருந்த ஒரு மெத்தையில் தீ பற்றியதால், அடர்த்தியான புகையும், வெளியில் இருந்து பார்க்கும் அளவிற்கு தீச்சுவாலைகளும் ஏற்பட்டன.
சமூக வலைத்தளங்களில் இந்த தீவிபத்தின் புகை மற்றும் தீப்பிழம்புகள் குறித்த வீடியோக்களும், சில எரியும் பொருட்கள் கீழே விழுந்ததும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு 9:15 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
அவர்கள் கண்டறிந்ததில், மெத்தை தீப்பற்றி எரிந்ததுடன் மட்டுமின்றி, அருகில் இருந்த படுக்கையறையிலும் வெப்பம் மற்றும் புகையினால் சேதாரம் ஏற்பட்டிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் குழாய் மூலம் தீயை அணைத்தனர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) வருவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டிடத்தில் இருந்து சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
வெளியேறும் போது, ஒருவர் தரைத்தளத்தில் விழுந்துவிட்டதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே சிலர் எரியும் அந்த அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து தீயை அணைக்க முயன்றதாகவும் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) குறிப்பிட்டது.