உணவை மெதுவாக சாப்பிட்டதற்காக 11 வயது சிறுமியை உடற்பயிற்சி செய்யும் உபகரணத்தால் பலமுறை தாக்கிய சிறுமியின் மாற்றாந்தந்தைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக, அச்சிறுமியின் தலை உடைந்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு அச் சிறுமி படுகாயமடைந்தாள்.
இந்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவோ, மருத்துவ உதவி நாடவோ சிறுமியின் தாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கடுமையான காயங்களால் நவம்பர் 10, 2020 அன்று நான்கு நாட்கள் கழித்து அச்சிறுமி உயிரிழந்தார்.
2020ஆம் ஆண்டு முழுவதும் இந்தப் பெண் குழந்தை தனது மாற்றாந்தை மற்றும் தாயிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்.
சாப்பிடுவது தாமதமானது, பள்ளி வீட்டுப்பாடத்தில் தவறுகள் நிகழ்ந்தது போன்ற சிறு காரணங்களுக்காக அவர் அச்சிறுமியை மிகவும் வன்முறையான முறைகளில் தண்டிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
தாய் சிறுமியை மிளகாய் சாப்பிட வைப்பது, கொதிக்கும் நீரை அவள் மீது ஊற்றுவது போன்ற ஈவு இரக்கமற்ற தண்டனைகளை வழங்கியுள்ளார்.
தமது கொடுமைகளை மறைக்க அந்தத் தம்பதியினர் பெரும் முயற்சிகளை எடுத்தனர்.
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பவே இல்லை, சிறுவர் நல அதிகாரிகள் குழந்தையை நேரில் வந்து பார்க்க அனுமதிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 2023 இல், அவ் இருவரும் தங்கள் செயல்களுக்கான பின்விளைவுகளை எதிர்கொண்டனர்.
மாற்றாந்தந்தைக்கு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அதேநேரம், அச் சிறுமியின் தாயிற்கு ஏழு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.