சிங்கப்பூரை தளமாகக் கொண்ட UOB வங்கி, விலைவாசி உயர்வைச் சமாளிக்க தனது 6,000 ஊழியர்களுக்கு ஒரு மாத கூடுதல் சம்பளத்தை போனஸாக வழங்கவிருக்கிறது.
இதில் 600 ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர். சிங்கப்பூர் தேசிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு 5.5% முதல் 7.5% வரை சம்பள உயர்வு அளிக்கவும் குழு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு UOB வங்கியின் லாபம் வெகுவாக அதிகரித்துள்ளது, இது S$6.06 பில்லியனாக உச்சம் தொட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 26% அதிகமாகும். மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள மற்றொரு வங்கியின் சில வணிகங்களை UOB கையகப்படுத்திய பிறகும், வங்கி S$5.7 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு சிறப்பான செயல்திறனுக்கு அதிகரித்த வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையே காரணம் என்று UOB கூறுகிறது.
இப்போது இதன் சில்லறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது. சிங்கப்பூரில் டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியுடன் வங்கி கூட்டு சேர்ந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இக்காலகட்டத்தில், UOB கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்தன.
குறிப்பாக நிகழ்ச்சி டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த வாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் உயர்வு காணப்பட்டது.