39 வயதான சிங்கப்பூர் பெண் காவல்துறை அதிகாரி ரஜினா ஷர்மா ராஜேந்திரன் அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, மோட்டார் சைக்கிள் விபத்தில் தூக்கி வீசப்பட்டு மூளையில் கடும் காயம் மற்றும் பார்வை இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.
மத்திய விரைவுச் சாலையில் இவர் பயணித்த மோட்டார்சைக்கிளில் இவருடைய கணவர் திடீர் பிரேக் போட நேர்ந்தது.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்ததால் ரஜினா மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
நான்கு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைக்கு ஏற்பட்ட பலத்த காயங்களையும், அவற்றால் செயல்பாட்டு சுதந்திரத்தை இழந்ததையும் எதிர்கொண்டார்.
இந்த விபத்து அவரை உடல் ரீதியாக பாதித்தது மட்டுமல்லாமல், அவர் 19 வயதிலிருந்து பணியாற்றிய சிங்கப்பூர் காவல்துறையில், பாராட்டுகளை தொடர்ச்சியாக பெற்று வந்த அவருடைய வாழ்க்கைப் பாதையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
விபத்து அவரது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய கடும் தாக்கம் காரணமாக, ரஜினாவுக்கு S$3.4 மில்லியன் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இவர் காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் கிடைத்திருக்கக்கூடிய வருமானத்தை ஈடு செய்யும் விதமாகக் இந்த இழப்பீடு கணக்கிடப்பட்டது.
அவருடைய கணவர் தமது வேலையை விட்டு விட்டு கவனித்து வந்ததால், எதிர்காலத்தில் பராமரிப்பாளருக்கான செலவினங்களையும் இழப்பீட்டுத் தொகை கணக்கில் எடுத்துக் கொண்டது.
ரஜினாவைக் கவனிப்பதற்காக அவரது கணவருக்கு ஏற்படும் வருமான இழப்பிற்கு ஈடு வழங்கக்கூடாது என காப்பீட்டு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவரும் விபத்தில் சிக்கியிருப்பதால் கணவருக்கு அந்த தரப்பு நஷ்டஈடு அளிப்பது இரட்டை நஷ்ட ஈடு ஆகிவிடும் என அவர்கள் முன் வைத்தனர்.
இருப்பினும், நீதிபதி இச்சலுகையை ரஜினாவுக்கு மறுப்பது அநியாயம் என்று கருதினார்.
விபத்துக்குப் பிறகு தம்பதியினரின் இழப்புகளையும் தியாகங்களையும் முழுமையாக அங்கீகரிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை நீதிபதி வலியுறுத்தினார்.
இறுதியில் S$93,080 ரஜினாவின் கணவருக்கு நஷ்டஈடாக வழங்கப்பட்டது.