Solar Panel at Changi Airport: 2025-ம் ஆண்டுக்குள், சிங்கப்பூரின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை சாங்கி விமான நிலையம் பெறவுள்ளது.
இதற்காக, சாங்கி விமான நிலைய குழுமம் (CAG) கெப்பல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. விமான நிலைய முனையங்கள், இதர கட்டிடங்கள் மற்றும் விமான ஓடுபாதையின் ஒரு பகுதியின் கூரைகளில் இந்த திட்டம் நிறுவப்பட உள்ளது.
இந்த சூரியசக்தி திட்டம் 10,000 வீடுகளுக்கான ஒரு வருட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவிற்கு திறன்கொண்டது.
மேலும், விமான நிலையத்தின் கார்பன் உமிழ்வை 20,000 டன் அளவிற்கு ஆண்டுதோறும் குறைக்கவிருக்கிறது, இது சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய நன்மை தரக்கூடிய விடயமாகும்.
விமான நிலையத்தில் சூரியசக்தி திட்டத்தை அமைப்பது என்பது, எளிதான விஷயமல்ல.
இதனை நிறுவும்போது, விமானிகளுக்கோ, போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கோ தடங்கலாகவோ, பிரதிபலிப்பு மற்றும் சமிக்ஞை குறுக்கீடுகளை ஏற்படுத்தாத வகையிலோ எந்த சிக்கலும் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீ பாதுகாப்பு உட்பட கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளையும் இது பின்பற்ற வேண்டும்.
ஒருமுறை முழுமையாக அமைக்கப்பட்டபின், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கண்காணிப்பு மையத்தின் கவனத்தின் கீழ் செயல்படும்.
இந்த சூரியசக்தி திட்டம், விமான நிலையத்தின் மின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த சூரிய சக்தி திட்டம் விமான நிலையத்தை இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.