சிங்கப்பூரில், கடந்த ஆண்டைவிட தற்போது அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பது குறித்து கவலைப்படுகிறார்கள்.
2024ம் ஆண்டு தொழிலாளர்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கப் போவதாக கவலை அதிகரித்து வருகிறது.
தேசிய வர்த்தக சங்க காங்கிரஸ் (NTUC) இன் பொதுச் செயலாளர் Ng Chee Meng, பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்த ஆண்டு பணி நீக்கங்கள் 2023 ஐ விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Ng Chee Meng “இந்த போக்கின் அறிகுறிகளை நாங்கள் காணத் தொடங்கியுள்ளோம்” என்று குறிப்பிடுகையில், வேலை குறைப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகலாம், மற்றும் சம்பள உயர்வு விகிதம் மெதுவாகவோ அல்லது குறைந்தோ இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இம் மாற்றமானது, தொழிலாளர்கள் மத்தியில் கடினமான சூழ்நிலை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பல ஊழியர்கள் வேலை இழப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றின் சாத்தியம் குறித்து NTUC க்கு தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். இது மேலும் கவலையை அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பணி நீக்கங்களுக்கு முதன்மை காரணமாக தொழில் இடமாற்றம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை மனிதவள அமைச்சகம் (MOM) குறிப்பிட்டுள்ளது.
Wholesale Trade, IT சேவைகள் மற்றும் Electronics உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை பாதிக்கும் பொருளாதார கொள்கைகளாலேயே இந்த மாற்றங்கள் பெரும்பாலும் ஏற்படுகிறன.
வேலைச் சந்தையின் நிலையற்ற தன்மை உள்ளூர் பிரச்சினைகள் மட்டுமல்ல, உலக பொருளாதார மாற்றங்களும் வணிகங்களையும், அதன் தொடர்ச்சியாக அவற்றின் ஊழியர்களையும் பாதிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
மாறிவரும் தொழில் போக்குகள் மற்றும் வேலைத் தேவைகளுக்கு மத்தியில் தொழிலாளர்கள் தயாராகவும், தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் இந்த சூழ்நிலை வலியுறுத்துகிறது.
சிங்கப்பூரில் வேலையைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி
சிங்கப்பூரில் வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. ஆகவே பலருக்கும் தாங்கள் வகிக்கும் பதவியைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதும், தங்களுக்கு வேலை பாதுகாப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்வதும், முதன்மையான தேவையாக இருக்கும்.
உற்பத்தித் திறன் மற்றும் தரமான பணி ஆகியவற்றில் சிங்கப்பூர் மிகவும் பெயர் பெற்ற நாடு. அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிவோர் எந்த நேரத்திலும் வேலையை விட்டு நீக்கப்படலாம். அதனால், தங்களின் பணியை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்பதைப் பற்றியே பலர் அடிக்கடி யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
உங்கள் வேலையில் சிறந்து விளங்குங்கள்
உங்கள் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள, நீங்கள் உங்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இது தான் சுலபமான மற்றும் அடிப்படையான வழி.
தொடர்ந்து நன்றாக வேலை செய்வது, பொறுப்புடன் பணியை முடிப்பது, பணி நேரத்துக்குத் தவறாமல் வருவது, மேலும் எதிர்பார்ப்பதை விடக் கொஞ்சம் அதிகமாக உழைக்கும் மனப்பான்மை, போன்றவை எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சிங்கப்பூரில் பணிபுரிவோருக்கு, அவர்களது திறமை மற்றும் அவர்கள் எவ்வளவு லாபகரமாக நிறுவனத்துக்கு இருக்கிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடப்படுகிறார்கள். ஆகவே, நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைய நீங்கள் உதவுகிறீர்கள் என்பதை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள்.
பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய யோசனைகளைக் கொடுங்கள். தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்கள் துறையில் என்னென்ன புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்கள் வருகின்றன என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப நீங்களும் உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் செய்தால், உங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் மிக முக்கியமானவர் ஆவீர்கள்.
பிறருடன் நல்லுறவை வளர்த்து நெட்வொர்க்கையும் பலப்படுத்துங்கள்
உங்கள் பணியிடம் மற்றும் உங்கள் துறையில் சக ஊழியர்கள் மற்றும் தொழில் அறிமுகமானவர்களுடன் நல்லுறவை வைத்துக்கொள்வது, உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் உதவும்.
சிங்கப்பூரில் நெட்வொர்க்கிங் மற்றும் தனிப்பட்ட அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி வைத்திருப்பது முக்கியம். சில சமயங்களில் இவை பல கதவுகளை உங்களுக்குத் திறக்கும்.
மேலும், நிறுவனத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்தால், உங்களுக்கு மனரீதியாகவும் தொழில்ரீதியாகவும் இவர்கள் உதவுவார்கள். சக ஊழியர்கள், உயரதிகாரிகள் மற்றும் உங்களது துறையைச் சேர்ந்தவர்களிடம் நல்லுறவை வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றவர்களுடன் கூட்டுறவுடன் பணிபுரிவதில் உங்களுக்கு நல்ல பெயர் இருந்தால், உங்கள் புகழ் பரவும். அதன் மூலம், நிறுவனத்துக்கு நீங்கள் இன்றியமையாத ஆள் ஆவீர்கள்.
மேலும், உங்கள் பணியிடத்தை விட்டு வெளியிலும் நெட்வொர்க்கிங் செய்யுங்கள். உங்கள் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டறைகள், போன்றவற்றிலெல்லாம் கலந்துகொண்டு உங்கள் நெட்வொர்க்கைப் பலப்படுத்துங்கள்.
இது போன்ற இடங்களில் பழகுவதன் மூலம் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம், ஆலோசனைகள் பெறலாம். ஏதிர்காலத்தில் வேறு வேலை தேவைப்பட்டால், இந்தத் தொடர்புகளின் மூலம் வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ள முடியும்.