விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளிலும், போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிக்கும் இடங்களிலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை கையும் களவுமாக பிடிக்க சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை புதிய உத்தியைக் கையாள உள்ளது.
வேகக்கட்டுப்பாடு கேமராக்கள் இல்லாத இடங்களிலும், இனி இந்த ‘ரெட் லைட்’ கேமராக்கள் மூலம் வேகத்தையும் அளவிட்டு, அபராதம் விதிக்கப்படும்.
சிங்கப்பூரில் கடந்த 2023ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
136 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டுக்கு பிறகு, இதுவே அதிகபட்ச விபத்து இறப்பு எண்ணிக்கையாகும்.
வேகக் கட்டுப்பாடு மீறல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மதிக்காமல் கடப்பது உள்ளிட்டவை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பது போக்குவரத்து காவல்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிலும், மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள், சாலையைக் கடக்கும் முதியவர்கள் ஆகியோர் கூடுதலாக பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இந்த அபாயகரமான போக்கை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் மற்றும் தண்டனைகளை அதிகரிக்கும் திட்டத்தில் காவல்துறை உள்ளது.
வேகக்கட்டுப்பாடு கேமராக்கள் இருக்கும் இடங்களில் மட்டும் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைக்கின்றனர், மற்ற பகுதிகளில் அளவுக்குமீறி வேகத்தில் செல்வதை போக்குவரத்து போலீசார் கவனித்துள்ளனர்.
எனவே, தற்போது ரெட்-லைட் கேமராக்களை வேக ரடாராகவும் பயன்படுத்தும் நடவடிக்கை மூலம், ஓட்டுநர்கள் விழிப்புணர்வோடு செயல்படுவதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிவப்பு சைகை விளக்கை மீறுதல் போன்றவற்றிற்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட உள்ளன.