ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களுக்கு அவர்களின் வேலை நேரம் முடிந்த பின்னர், முதலாளிகளின் அழைப்புகளைப் புறக்கணிக்கும் உரிமையை வழங்கும் சட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ள “தொடர்பை துண்டிக்கும் உரிமை” (“right to disconnect”) என்ற இந்த திட்டமானது, தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையைப் பேணுவதற்கான பெரிய அளவிலான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
இச்சட்டத்தை மீறும் முதலாளிகள் அபராதம் செலுத்த வேண்டிவரலாம். இந்த சட்ட மசோதா பெரும்பான்மையான செனட்டர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
வேலையல்லாத நேரங்களில் முதலாளிகளுடன் தொடர்பில் இருக்க நிர்பந்திக்கப்படுவதன் மூலம், பணியாளர்கள் இலவசமாக, கட்டணமின்றி கூடுதல் நேரம் உழைக்கும் நிலையை, இந்த சட்டம் தடுக்க முனைகிறது.
பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே இதே போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆதரவு நாடாளுமன்றத்தில் உள்ளதாக தொழிலாளர் நல அமைச்சர் டோனி பர்க் உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், அனைவரும் இந்த புதிய “Right to Disconnect” உடன் உடன்படவில்லை.
இது நெகிழ்வான பணி ஏற்பாடுகளைத் தடுக்கும் என்றும், வணிகத் துறையின் போட்டித்தன்மையைப் பாதிக்கும் என்றும் சிலர் குறிப்பிடுகிறனர்.
தற்போது ஆஸ்திரேலியர்கள் ஓராண்டிற்கு சராசரியாக ஆறு வாரங்கள் கட்டணமில்லா கூடுதல் நேரத்தை வேலை செய்கிறார்கள். இது பல பில்லியன் டாலர் இழப்பாக உள்ளது.
பணி நேரம் அல்லாத நேரங்களில், தகுதியற்ற வகையில் தங்களுக்கு முதலாளியிடமிருந்து தொடர்பு வருவதாகத் தொழிலாளர்கள் கருதினால், அவர்கள் Fair Work Commission இல் புகார் அளிக்கலாம்.
அதன்மூலம் சம்பந்தப்பட்ட முதலாளிகளைச் செயல்படாமல் தடுக்கவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது.