சிங்கப்பூர் காவல் துறையில் இனவாத குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் க. சண்முகம், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஒழுங்கு விதிமீறல் சம்பவங்களாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதுபோன்ற பிரச்சினைகளை முறைகேடான நடத்தையாகவும் பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களை ஆவணப்படுத்தி, கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும், தொடர்புடையவர்களின் நடத்தையை நெருக்கமாகக் கண்காணிப்பதையும் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு காவல்துறை அதிகாரி யுவராஜா கோபால் மறைவு குறித்து அமைச்சர் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியானது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றிய அதிகாரி யுவராஜா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காவல் துறையில் இனப்பாகுபாடு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது பரவலான கவலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் காவல் துறை இனப்பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கும் தடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
யுவராஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது சில குற்றச்சாட்டுகள் உண்மை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், சில குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சண்முகம் தெளிவுபடுத்தினார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தலைமை சட்ட அதிகாரி அலுவலகம் முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் காவல் துறையில் நேர்மையை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும், பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சமுதாயத்தில் இனவாத குற்றச்சாட்டுகளை கையாள்வதில் உள்ள சவால்களையும் இந்த சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது.
சிங்கப்பூரில் இனவாதத்தைத் தவிர்ப்பது எப்படி?
பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நாடு சிங்கப்பூர். அங்குள்ள மக்களிடையே ஒற்றுமை மிகவும் மேலோங்கி இருப்பதில் அந்நாட்டு அரசு எப்போதுமே பெருமை கொள்ளும்.
ஆனால், எந்தச் சமூகமாக இருந்தாலும், அங்கு இனவெறி எனும் சவால் சிறிதளவாவது இருக்கும், சிங்கப்பூரும் விதிவிலக்கல்ல. ஒருங்கிணைந்த சமூகமாகச் சிங்கப்பூர் விளங்குவதற்கு, இனவெறியை ஒழிப்பது மிகவும் அவசியம்.
எப்படி இனவெறியைத் தவிர்க்கலாம், அனைவரையும் உள்ளடக்கிய சூழ்நிலையை எப்படி மேம்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கற்றுக்கொள்ளுங்கள், பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
இனவெறியை ஒழிப்பதற்கான முதல் படி தான் கல்விதான். சிங்கப்பூரில் வாழும் பல சமூகத்தினரின் கலாச்சாரம், இனம், மதம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டால், அவர்கள் மீது நமக்குள்ள தப்பெண்ணங்களும் தவறான முன்முடிவுகளும் மறையும்.
சிங்கப்பூரைத் தாயகமாகக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட சமூகத்தினரின் வரலாறு மற்றும் மரபுகள் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த அறிவு நம்முள் சக மனிதர்கள் மீதான அக்கறையையும், மதிப்பையும் அதிகப்படுத்தும். இவை தான் இனவெறிக்கு மருந்து.
இனம் மற்றும் பல்வேறு சமூகத்தினர் பற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசுங்கள்.
இது போன்ற உரையாடல்கள் சிலநேரங்களில் சங்கடத்தைத் தரலாம். ஆனாலும், இனவெறி சார்ந்த கருத்துகளையும் செயல்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டுமென்றால், இது போன்ற உரையாடல்கள் தேவை தான்.
வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசினால் தான் மூடநம்பிக்கைகளையும் களை எடுக்க முடியும். இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகச் சிந்தனையை மக்களிடையே வளர்க்க முடியும்.
சமத்துவத்திற்காகக் குரல் கொடுங்கள்
அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க வெறும் புரிதல் மட்டும் இருந்தால் போதாது, செயலிலும் இறங்க வேண்டியிருக்கும்.
பணியிடத்தில், பொது இடங்களில் அல்லது இணையத்தில், இனவெறியைக் குறிக்கும் சொற்கள் அல்லது செயல்கள் இருந்தால் அவற்றை எதிர்த்துப் பேசத் தயங்காதீர்கள்.
சிங்கப்பூரில் இன நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சமூகத்தை அமைக்க முயலும் குழுக்களையும், நிறுவனங்களையும் ஆதரியுங்கள். உங்கள் பேச்சிலும் செயலிலும் அனைத்து இனங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்குமான மரியாதை இருக்கட்டும்.
உங்களைச் சுற்றி உள்ள பன்முக கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அனைத்து இனத்தவரும்தங்களது பங்களிப்பை அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.