வாகன விபத்தை ஏற்படுத்திய 26 வயதான டெலிவரி ஊழியரான நபர் ஒருவருக்கு 31 மாத சிறைத்தண்டனையும், எட்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பர்களை லாரியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் ஏற்பட்ட சோக விபத்தில் அவரது நண்பர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வாகனத்தை ஓட்டியவர் உட்பட பலர் காயமடைந்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு மற்றும் படுகாயத்தை ஏற்படுத்தியது, விபத்துக்குப் பிறகு திருட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இரவில், அந்நபர் தனது ஏழு நண்பர்களுடன் சுற்றியிருக்கிறார்.
அவர்களின் வயது 15 முதல் 23 வரை. உணவும் பானமும் பகிர்ந்து கொண்ட அவர்கள் பிறகு வீட்டுக்கு லாரியில் பயணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இருக்கை நெருக்கடி போன்ற வாகனத்தின் வரம்புகளை அறிந்திருந்தும், மழை நிலவரத்தையும் பொருட்படுத்தாமல் வேகமாக வாகனம் ஓட்டிய அந்நபர், கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
விளைவு என்னவென்றால், லாரி சாலையைவிட்டு விலகி மரத்தில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தின் தாக்கம் இரண்டு பயணிகளின் உடனடி மரணத்திற்கும், 15 வயது உட்பட மற்றவர்களுக்கு பலத்த காயங்களுக்கும் காரணமாக அமைந்தது.